திருமதி.வே .சாந்தா இ.ஆ.ப

மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திருமதி வே. சாந்தா. இ.ஆ.ப., அவர்கள் 2005 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியை சேர்ந்தவராவார். இவர் விருதுநகரில் உள்ள வி.வி.வன்னியபெருமாள் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார். இவரின் குழந்தை பருவத்திலிருந்தே பொது சேவை என்பது இவரை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். ஊரக பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, சுற்றுச்சூழல், திறன், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பின் மூலம் வாழ்வாதாரம். தன்னிறைவு, பெண்களுக்கு தொடர் கல்வி மற்றும் குழந்தைகள் உரிமைகள் போன்றவைகள் தொடர்பான செயல்பாடுகளில் புதுமையை கடைபிடித்து செயல்படுத்துவது என்பது இவரின் தனியாத அவா. குழந்தைகள் திருமணம் தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் இவர் முனைப்புடன் செயல்பட்டதோடல்லாமல், பெண்களின் தொடர் கல்விக்கும் அயராது பாடுபட்டு வருகிறார். 1997இல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – குருப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராகப் பணியமர்த்தப்பட்டார். இவர் நீலகிரி மாவட்ட கூடலூர் கோட்டம் மற்றும் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிப்பாளைய கோட்டம் ஆகிய இடங்களில் வருவாய் கோட்டாட்சியராகப் பணிபுரந்த வகையில் பலதரப்பட்ட கள அனுபவங்களை பெற்றுள்ளார். வட சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளராகவும், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் துணைச் செயலாளராகவும், வணிக வரித்துறையின் இணை ஆணையராகவும், கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும் சாகோ சர்வ் மேலாண் இயக்குநராகவும், பட்டு வளர்ப்புத்துறை, இயக்குநராகவும், மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆடசித்தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.