Close

மாவட்டம் பற்றி

பெரம்பலூர் மாவட்டம் சென்னைக்கு தெற்கே 267 கி.மீ தொலைவில் தமிழ் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 10.54’ மற்றும் 11.30’ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54’ மற்றும் 79.30’ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையே 1757 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடலோரப் பகுதி இல்லாத நிலப்பகுதி மட்டுமே உள்ள மாவட்டமாகும்.

இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையில் வெள்ளாறு உள்ளது.

நிலத்தடி நீரை குழாய் மற்றும் கிணறுகள் மூலமாக தக்கவைத்துக் கொள்வது மிக முக்கியமான பாசன முறையாகும். நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம் மற்றும் முந்திரி முதலியவை இம்மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முக்கியமான பயிர்கள். தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,65,223 ஆகும். மாவட்டத்தில் மக்கள் தொகை அடர்த்தி 1 சதுர கிலோ மீட்டருக்கு 321 ஆகும்.

ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரசாணை எண் Ms. NO..913 வருவாய், (Y3) துறை நாள் 30.09.1995 இன் படி மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து மேற்கண்ட அரசாணைப்படி புதிய பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாக கொண்டு உருவானது. அரசாணை எண் Ms. 656, வருவாய்த்துறை, நாள் 29.12.2000 மற்றும் அரசாணை எண் Ms. NO.657, அரசாணை நாள் 29.12.2000 இன் படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

பின்னர் அரசாணை எண் Ms. No. 167 வருவாய்த்துறை நாள் 19.04.2002 மற்றும் அரசாணை எண் Ms. No.168 வருவாய்த்துறை நாள் 19.04.2002 இன் படி மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களையும் ஒன்றிணைத்து பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையின் படி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் 19.04.2002 அன்று உருவானது. பின்னர் அரசாணை எண் Ms. No. 683 வருவாய்த்துறை நாள் 19.11.2007 இன் படி பெரம்பலூர் மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பெரம்பலூரைத் தலைநகரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டமும் அரியலூரைத் தலைநகரமாகக் கொண்டு அரியலூர் மாவட்டமும் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.